ஒரு நாள் பயணம் (பயணக் கதை)
அன்று ஞாயிற்றுக்
கிழமை(01.06.1980). நானும் எனது நண்பன் பழனியும்
திங்கட்கிழமை காலை 7.15க்கு கலந்துக்கொள்ள வேண்டிய ஏர் ஃபோர்ஸ் இன்டர்வியூவிற்குப் போக ஞாயிறு அன்று இரண்டு மணிக்குக் கிளம்பிய வள்ளிமணாளன்
பேருந்தில் பயணம் செய்தோம்.
பேருந்தில் ஒரே
பரபரப்பு அன்று. ஏனென்றால் ஒவ்வொரு ஞாயிறு
தோறும் பொதட்டூர்ப்பேட்டையில் சந்தை கூடுவது உண்டு. இதனால் பக்கத்திலிருக்கும் கிராமங்களில் உள்ளவர்கள்
சந்தைக்கு வருவதும் போதுவதுமாக இருப்பதால் மற்ற நாட்களை விட அன்று கூட்டம் அதிகம். அப்போது சத்தத்திற்குக் குறைவா சொல்ல முடியும்.
இந்தச் சத்தத்துடன்
வண்டி உறுமிக் கொண்டு செல்லும் சத்தம் வேற கூடப் பங்கு போட்டுக் கொண்டது.
வண்டி இரண்டு
மணிக்குப் பொதட்டூர்ப்பேட்டை பேருந்து நிலையத்தை விட்டுப் புறப்பட்டது.
பேருந்தில் நான்
ஜன்னல் ஓரமாகவும் என் பக்கத்தில் பழனியும் அதற்குப் பக்கத்தில் எனது சிற்றப்பாவும்
அமர்ந்து இருந்தனர்.
பேருந்து புறப்பட்ட
சத்தத்தோடு பயணிகளில் ஒருவர் யோவ் டிரைவர் பாட்டு
போடுய்யா என்று குரல் எழுப்பினார்.
ஆமாம்… எங்க ஊர்
வள்ளிமணாளன் பேருந்தில் டேப் ரிக்கார்டும் வைத்துள்ளனர். சத்தத்தில் சத்தம் காதையும் துளைத்துக் கொண்டு மண்டையை
நன்றாகத் தாக்கியது.
ஒலியைக் கேட்பது
தீங்கு என்றாலும் அதை யார் தான் பொருட்படுத்துகிறார்கள். ஏனென்றால் காதில் அமைந்து இருக்கும் செவியறை மிகவும்
மெல்லியதானது. அதை அதிகமான சத்தத்துடன் ஓர்
உந்து விசை தாக்கும்போது செவியில் அடங்கிய முக்கிய உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் செவிடாகும் தன்மையும் உண்டாகலாம். இதனால் தான் நோயாளி ஒருவனை அமைதியான இடத்திற்கு
அழைத்துச் செல்லச் சொல்கிறார்கள். ஏனென்றால்
அமைதியே தனது பூர்வீகமாகக் கொண்டுள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் சத்தத்தையே
காண முடியாது. மற்றும் அங்கு எங்குப் பார்த்தாலும்
பசுமையே காணப்படுவதால் நல்ல காற்றோட்டம் ஏற்படுகிறது. மனதிற்கு ஆனந்தத்தையும், உடலுக்குத் தூய்மையையும்
தருகிறது. அதாவது நாம் சுவாசிக்கும் பிராண
வாயுவைப் பச்சிலம் செடிகள் வெளிவிடுகிறது.
நாம் வெளியிடும் கரியமில வாயுவைத் தாவரங்கள் சுவாசிக்கின்றன. இதனால் மனிதனுக்கும் தாவரத்திற்கும் நெருங்கிய தொடர்பைப்
பற்றிப் புரிந்துக்கொள்கிறோம்.
எங்கள் பேருந்து
நெடுங்கல் எல்லையைத் தாண்டி திருத்தணியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. அதற்குமுன் யாரோ என் கையில் எதையோ கொடுத்தார். எனது கையை அது உரச என்ன என்று பார்த்தேன். அது ஒரு நான்கு பக்கம் கொண்ட சிறு ஏட்டுப் புத்தகம். அதன் தலைப்பில் என்னை மன்னியுங்கள் என்று எழுதப்பட்டு
இருந்தது. இதைப் பார்த்ததும் இதைக் கொடுத்தது யார் என்று ஆராய்ந்தேன். ஆள் தெரியவில்லை. அவர் நெடுங்கலில் இறங்கி இருக்கலாம் என்று நினைத்து
எனது நண்பன் பக்கம் திரும்பினேன். என் கையில்
உள்ளதுபோல அவன் கையிலும் ஒன்று இருந்தது. அதை
அவன் மும்முரமாகப் படித்துக் கொண்டு இருந்தான்.
நானும் படிக்கத் தொடங்கினேன்.
என்னை மன்னியுங்கள்
என்ற தலைப்பின் கீழ் இப்போது நான் உங்களைச் சந்தித்தது போல எப்பொழுதேனும் சந்திப்பேனோ?
மாட்டேனோ? அடியாளின் வேண்டு கோலுக்காக இதை ஒரு முறை படிப்பீர்களா? நண்பர்களே… என்று
ஒரு பக்கத்தையே பெரிய எழுத்துக்களால் நிரம்பி இருந்தது.
அப்போதுதான் புரிந்தது
என் கையில் இருந்தது கிருத்து மதக் கொள்கை அடங்கியது என்று மெல்ல அவற்றைப் படித்தேன். அதில் எனக்குப் புரிந்தது எல்லாம் பாவம் செய்த எல்லோரையும்
கர்த்தர் மன்னிப்பார், அவரைத் தொழுவுங்கள் நன்மைகள் கிடைக்கும் என்று மட்டுமே புரிந்தது. அப்போது பேருந்து சாமராஜகண்டிகை நோக்கிச் சென்றுக்
கொண்டு இருந்தது.
இது பற்றி நீ
என்ன நினைக்கிறாய் என்று என் கையில் இருக்கும் சிறு ஏடுகளைக் காண்பித்துக் கேட்டேன். அதற்கு அவன்…
உலகத்தில் அரபு
நாடுகள், ஈரான், ஈராக், இந்தியா போன்ற நாடுகள் தவிர மற்ற உலக நாடுகளுக்கு எல்லாம் ஒரே
ஒரு கடவுள் தான். அந்த நாட்டு மக்கள் நேசிக்கும்
கடவுள் கர்த்தர் ஒருவரே என்றான். அதற்கு இடையில்
நான்…
இந்தியாவில் பிறந்த
கர்த்தருக்கு வெளிநாட்டில் அதிக செல்வாக்கு இருக்கிறது. அதனாலே அவரையே, அவருடைய கொள்கையையே தெய்வமாகப் போற்றுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் பிறந்த அவரை யாரும் இங்கு நேசிப்பது
இல்லையே. இதற்குக் காரணம் என்ன என்று நண்பன்
பழனியைக் கேட்டேன்.
எப்பொழுதும் தன்
பொருளைத் துட்சமாக மதிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள் நாம். நாம் எல்லோரும் மாற்றான் தோட்டத்து மல்லிகையையே
விரும்புவோம்.
ஏன் இந்து மதம்
இந்தியாவிலே தோன்றியது தானே… இம்மதம் இந்தியாவில் சிறந்து விளங்குகிறதே என்று கேட்டேன்.
இதற்குப் பதில்
சொல்லத் தெரியாமல் திணறினான். அப்போது பேருந்து
திடீர் நிறுத்தம் செய்ததனால் பேருந்தில் பயணம் செய்த நாங்கள் எல்லோரும் ஒரு உந்துதல்
ஒரு பிந்துதல் செய்தோம். பேருந்து நிறுத்தக்
காரணத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம்.
அங்குச் சின்ன கன்றுக்குட்டி அங்கும் இங்கும் துள்ளித்துள்ளி வழியை விடாமல்
இருந்தது. அப்போது வண்டி பெருகும்மியை அடுத்த
ஏரியின் கரைமேல் சென்றுக் கொண்டு இருந்தது.
இங்கிருந்து பார்த்தால்
திருத்தணி மலையில் குடியிருக்கும் அறுபடையானின் திரு உருவம் ஓம் முருகா நன்றாகத் தெரிகிறது. மெல்ல என் நண்பனிடம் நீ நேர்காணலுக்குப் போவது இதுதான்
முதல் முறையா? என்று கேட்டேன்.
ஆமாம்… நேர்காணல்
எப்படி இருக்கும் என்று என்னையே அவன் கேட்டான்.
அதற்கு நானும் எனக்கும் முதல் நேர்காணல் இதுதான் என்று சொல்லிக் கொண்டு இருந்தேன். திருத்தணி வந்துவிட்டது. இதுவரை
எங்கள் சீட்டில் அமர்ந்து இருந்த என் சித்தப்பா இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறங்கிக்
கொண்டார். சற்று நேரத்துக்கு எல்லாம் நாங்களும்
திருத்தணி பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டோம். அப்போது மணி 3.30. ஒரு மணியும் 30 நிமிடமும் நாங்கள் பயணம் செய்ததில்
நஷ்டம் ஒரு ரூபாய்.
ஆமாம். பொதட்டூருக்கும் திருத்தணிக்கும் இப்போது வள்ளிமணாளன் பேருந்து ஒரு ரூபாய்தான். ஆனால் எங்களுக்குக் கிடைத்த லாபம் பொதட்டூரில் இருந்து
திருத்தணி வந்து அடைந்தோம். அத்தோடு கிருஸ்து
பற்றிய ஆலோசனை என்னறிவுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்ததோடு என் கேள்விக்குப் பதில் தராத
எனது நண்பனைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது.
நண்பன் பழனி நன்றாகப்
படிக்கும் பிள்ளை. நான் நன்றாக அவ்வளவு கல்வியறிவு
இல்லாதவன் தான். இருந்தாலும் படிப்பில் ஒருவருடன்
ஒருவன் போட்டி போடுவது இயல்பு தானே. அந்தப்
போட்டியில் நான் தோற்றவன் தான். அவன் என்னைவிட
ஆண்டுத் தேர்வில் எழுபது மதிப்பெண் கூடுதல் அடைந்தவனே. என் கேள்விக்குத் திண்டாடினானே என்றுதான் சிரிப்பு
வந்தது.
நாங்கள் சென்னை
செல்ல வேண்டிய பேருந்து எண்.97 திருத்தணியில் இருந்து 4.30க்குத்தான் புறப்படும் என்றார்கள். இருந்தாலும் கூட்டம் இருப்பதனால் இரண்டு சீட்டு
பிடித்து அதில் அமர்ந்துக் கொண்டோம். சற்றைய
ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் பேருந்தில் பயணியர் நிரம்பி வழிந்தனர்.
நடத்துநர் பணம்
வாங்கிக் கொண்டு அதற்கான பயண அனுமதிச் சீட்டை வழங்கிக் கொண்டு இருந்தார். எங்களிடம் வந்தார். நான் இரண்டு சைதாப்பேட்டை என்றேன்.
பழனி ஏண்டா பத்து
ரூபாய்க்கு இரண்டு சைதாப்பேட்டை கேட்கிறாயே… என்றான்.
நடத்துநர் எங்களைப்
பார்த்துச் சிரித்துக் கொண்டே இரண்டு அனுமதிச்
சீட்டும் இரண்டு ரூபாய் பத்துக் காசும் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
எங்களுக்குப்
பின் சீட்டில் அமர்ந்தவர்கள் இரண்டு இராமஞ்சேரி என்று ஐந்து ரூபாயை நீட்டினார்கள். இதற்கு நான் ஏம்மா ஐந்து ரூபாய்க்கு இரண்டு ராமஞ்சேரி
கேட்கிறாய். அந்த இடம் ரொம்பச் சின்னதோ என்றேன். எங்கள் பேச்சையே கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் பலர்
சிரித்தனர். எங்களுக்கு அப்போது தர்ம சங்கடமாய்ப்
போய்விட்டது.
அப்போது எங்கள்
அருகே இரண்டு பெல்பாட்டம் வந்து நின்றன. யார்
இந்த பெல்பாட்டம் என்று முகத்தைப் பார்த்தேன்.
ஒருவன் ஒன்று, மற்றொன்று ஒருத்தி என்பதை அவர்கள் முகத்தைப் பார்த்துத் தெரிந்துக்
கொண்டேன்.
நடத்துநர் அந்தப் பெண்ணைப் பார்த்து சார் டிக்கெட் எடுங்க என்று கேட்டார். எனக்குச் சிரிப்பு பெண்ணைப் போய் சார் என்கிறாரே
என்று. அப்போது அவளுடன் வந்து இருந்தவன் இரண்டு
ஐந்து ரூபாய் நோட்டுக்களை நீட்டி இரண்டு மெட்ராஸ் என்றான்.
அப்போது, அருகில்
இருந்தவர்கள் எங்களைப் பார்த்து புன்சிரிப்புச் செய்தார்கள். என்னடா இது யாரு பார்த்தாலும் இரண்டு இரண்டு என்கிறார்களே
என்று நினைத்தேன். நடத்துநர் அவர்களிடம் மீதி
சில்லரையும் சீட்டும் கொடுத்து மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்து சா… என்று கூற முடிக்கும்
முன் அவர் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுட்டாரோ என்னவோ… சார் என்பதை சா வோட நிறுத்திக்
கொண்டு அந்தப் பக்கம் போங்க என்று பொதுவாகச் சொன்னதும் அந்தப் பெண்ணைப் பார்த்து அவர்
மிரண்டதும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.
காற்றில் எங்கோ
யாரோ ஆங்கிலத்தில் உரையாடுதல் கேட்டது. பேச்சு
வந்த திசையில் என் பார்வையை நோக்கினேன். என்
அருகில் நின்றுக் கொண்டு இருந்த அந்த இரண்டு மெட்ராஸ்காரர்கள் தான் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் பேச்சை
உற்றுக் கேட்டேன். ஒட்டுக் கேட்பதும், மற்றவர்
பேச்சில் கவனம் செலுத்துவதும் தவறுதான் என்றாலும் அவர்கள் ஆங்கிலத்தில் இனிமையாக உரையாடிக்
கொண்டிருந்ததை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள்,
திருத்தணியின்
அழகு பற்றியும், ஊரின் சிறப்புப் பற்றியும், சுற்றுப்புறம் பற்றியும் பேசிக் கொண்டதில்
இருந்து அவர்கள் இந்த ஊருக்குப் புதிது, கோயிலுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துக்
கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.
அவர்கள் உரையாடல்
பக்கத்து சீட்டில் அமர்ந்து இருந்து ஒரு பொம்பலைக்குக் கேட்டிக்கும் போலத் தெரியுது. அதனாலே அவங்க இங்கிலீசுலேயே பேசராங்க பாருங்க என்று
அந்த அம்மா பக்கத்தில் இருந்த அவள் கணவனிடம் சொன்னாள்.
இப்படியும் மக்கள்
இருக்கிறார்களோ? என்று வியப்பில் ஆழ்ந்தேன்.
திடீரென்று ஜாபகம் வர, நான் ஸ்கேல் வாங்கவில்லை வாங்கிட்டு வருகிறேன் என்று
சொல்லிவிட்டு விடைபெற்று சென்றேன்.
ஸ்கேலை 50 காசு
கொடுத்து ஒன்று வாங்கிக் கொண்டு பேருந்தில்
ஏறவும், பேருந்து கிளம்பவும், மணி 4.30 அடிக்கவும் சரியாக இருந்தது.
பேருந்து திருத்தணி எல்லையை விட்டுச் சென்னை நோக்கிச் சென்றுக் கொண்டு
இருந்தது. அப்போது எனது நண்பன் அமைதியைக் கலைத்து,
நாம் சேர வேண்டிய
இடம் எப்பொழுது போய்ச் சேரும் என்றான்.
அவன் இதுவரை சென்னைப்
பட்டணத்தையே பார்த்தது இல்லை. அதனால் தான் கேட்டான்.
இரவு 7லிருந்து
7.30க்குப் போகும் என்றேன்.
சிறிது நேரம்
மௌனம்.
மீண்டும் நானே
மௌனத்தைக் கலைத்து நேர்காணலில் என்ன வெல்லாம் கேட்பார்களோ என்று நான் கேட்டேன்.
நாட்டில் தலைநகர்,
அபூர்வ நிகழ்ச்சி ஏதாவது பற்றிக் கேட்பார்கள் என்றான் அவன்.
ஏதாவது குறிப்பு
எடுத்து இருக்கிறாயா? என்று பழனியைக் கேட்டேன்.
இல்லை என்றான். மீண்டும் அவனே நீ ஏதாவது எடுத்து இருக்கிறாயா? என்று
கேட்டான்.
ஆமாம்… என்று
கூறி தினந்தந்தியில் ஒரு வாரத்திற்கு முன் உலகில் நோபல் பரிசு பெற்றவர் பெயரும், அவர்கள்
வாழும் நாடும் குறிப்பிட்டிருந்தது. அத்துடன்
அவர்கள் எதற்கு நோபல் பரிசு பெற்றார்கள் என்ற விவரமும் இருந்ததால் அது எப்போதாவது தேவைப்படும்
என்று குறிப்பு எடுத்து இருந்தேன். அது இப்போது…
நான் எனது ஒரிஜினல்
சர்டிபிகேட்டு அட்டஸ்ட்டட் காப்பியும், துணி மணிகளையும் எடுத்துச் சென்ற தோள் பையில்
தான் இந்தச் சிறு குறிப்பையும் வைத்து இருந்தேன்.
மெல்ல அந்தத் தோள் பையின் ஜிப்பை மெல்ல அதன் பிடியில் இருந்து நீக்கி அந்தக்
குறிப்புக் காகித்தை வெளியில் எடுத்து அவன் கையில் கொடுத்தேன்.
அதை அவன் மேலோட்டமாக ஒருமுறை பார்த்துவிட்டு என்னிடம்
கொடுத்தான்.
ஆம். அவன் எதையும் ஆழ்ந்து படித்ததே கிடையாது. எதையும் மேலோட்டமாகப் படித்தாலே அவன் மண்டையில்
ஏறுதோ என்னமோ? அதனாலே தான் அவன் அவ்வாறு படிக்கிறான். இதைப் பற்றி
எப்பொழுது கேட்டாலும் மீண்டும் சொல்லும் சக்தி பெறுபவன். ஆகையாலேதான் அவன் மேலோட்டம்விட்டுத் திருப்பித்
தந்துவிட்டான்.
அப்போது, நாங்கள்
சென்றுக் கொண்டு இருந்த பயணப் பறவை சற்று வேகம் குறைந்ததை உணர்ந்தேன். அப்போது ஏதோ ஜனநெருக்கமான இடம் வருகிறது என்பதற்கான
சத்தமும் வரவே ஏதோ ஊர் வருகிறது என்று ஜன்னல் அருகே எட்டிப் பார்த்தேன். ஆம். வந்திருப்பது
கனகம்மா சத்திரம்.
என்ன ஊர் என்று
நண்பன் கேட்டான்.
கனகம்மா சத்திரம்
என்றேன்.
அங்கு இறங்க வேண்டிய
பயணிகள் எல்லாம் இறங்கினர். ஆனால் அதற்கும்
மேலே இருந்தனர் பயணம் செய்ய இருந்தவர்கள்.
அவர்களை நடத்துநர் அவர்கள் வேண்டாம் என்று தடுத்து பேருந்தைப் புறப்படச் சத்த
ஒலியை எழுப்பி வண்டிக்கு உரிமையளித்து ஓட்டுநரைப் போக அனுமதி அளித்தார். இதற்கு இடையில் தனிமையில் உள்ளவர்கள் சிலர் படிக்கட்டுக்களில்
தொற்றிக் கொண்டு ஏறினர்.
கீழே நின்றவர்
எத்தனை பேர் பேருந்தின் ஊடே ஓடி வந்தனர்.
அவர்கள் என்ன
அவசரமோ? யாருக்குத் தெரியும். ஒவ்வொரு பேருந்துக்கும் எவ்வளவு இடைவெளி. இந்த இடைவெளியில் எத்தனை சந்தர்ப்பங்கள் நிகழும். கீழே நின்றவர்கள் எத்தனை வேலைகளை இழக்க நேரிடுமோ? யார் கண்டார்கள். என்னைப் போலே நேர்காணலுக்குச் செல்ல இருப்பவர்களும்
இதனால் இழக்க நேரிடும் அல்லவா? அப்போது எனக்கு அவர் (நடத்துநர்) மீது எனக்குக் கோபமாக வந்தது.
அதற்குமேல்,
இந்த ஐம்பது பைசா
டிக்கட் எல்லாம் நகரப் பேருந்தில் போனால் என்ன?
என் உயிரை எடுக்குதே… என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
அப்போது பேருந்து
கனகம்மா சத்திரத்தைத் தாண்டி வெகு வேகமாக திருவள்ளூர் நகரை நோக்கி விரைந்துக் கொண்டு
இருந்தது.
நான் பேருந்தை
ஒரு முறை நோட்டம் விட்டேன். திருத்தணியில்
இருந்த கூட்டத்தைவிட இப்பொழுது சற்று தளர்ந்து மாலை வேளையில் சூரியனின் மிதமான வெப்பமும்,
வயல் வெளிகளில் பசுமையான தோற்றமும், மாலைக் காற்றும், வண்டி உறுமிக் கொண்டு தூசிகளைப்
பரப்பி அந்தக் காற்றோடு கலந்து எங்கள் முகத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டே இருந்தன.
நின்றுக் கொண்டு
இருந்தவர்களுக்கு அந்தத் தொல்லை இல்லை.
அப்பொழுதும் அந்த
மெட்ராஸ் இரண்டு டிக்கட் எங்கள் பக்கத்திலேயே நின்றுக்கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசிக்
கொண்டு இருந்தனர். நான் அவர்கள் இனிமையான ஆங்கிலப்
பேச்சுக்கு அடிமையானேன்.
அவர்கள் நாங்கள்
ஆங்கிலேயர்க்கே பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு சொல் ச்சு ஒரு எழுத்து
தமிழில் வந்ததே இல்லை.
தற்செயலாக ஜன்னல்
பக்கமாக திரும்பினேன். திருவள்ளூர் வந்ததற்கு
அறிகுறியாக கிருஸ்துவின் மேல்நிலைப்பள்ளியைத் தாண்டி நாங்கள் செல்லும் பேருந்து சென்றுக்
கொண்டு இருந்தது.
என் நண்பன் பழனியிடம்
திருவள்ளூர் வந்துவிட்டது என்று சொல்லி முடிப்பதற்குள் பூண்டி செல்லும் வழி வரவே, இது
தான் பூண்டி செல்லும் வழி என்றேன். அவனை நான்
நீ எப்பொழுதாவது பூண்டி வந்து இருக்கிறாயா? என்று கேட்டேன்.
இல்லை என்றான்.
அதில் எவ்வளவு தண்ணீர்
தேக்கி வைத்திருக்கிறார்கள். ஏரியா
அது. இல்லை இல்லை தேக்கி வைத்த சிறு கடல் அல்லவா? அதன் கரையோரம் எப்படியெல்லாம் அலங்கரித்து வைத்து
இருக்கிறார்கள். என் எண்ணத்தைக் கலைத்து,
நீ பார்த்திருக்கிறாயா?
என்றான்.
ஆமாம். தற்செயலாக பார்த்திருக்கிறேன். முன்பொருநாள் பொன்னேரிக்குச் செல்லும் போது பஸ்ஸில்
இருந்தே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றேன்.
அத்தோடு எங்கள் பேச்சு நின்றதும், திருவள்ளூர் பேருந்து நிலையம் வரவும், திருவள்ளூர்
பயணிகள் இறங்கவும், ஏறவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பேருந்து நிலையத்தில் ஓர்
ஓரத்தில் பழக்கடைகளும், அதேபோல் மறு ஓரத்தில் கழிவுப் பகுதியும் அமைந்து இன்பமும்,
துன்பமும் கலந்த மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக அந்த நகரின் பேருந்து நிலையம்
அமைந்து இருந்தது. ஒரு வகையில் பெருமைபடக்
கூடியது தானே. அதே சமயம் அந்த நிலை மக்களுக்கு
நோய் உண்டாக்கும் தன்மையை அல்லவா உண்டாக்குகிறது.
சங்க காலப் புலவர்களில்
தமிழ் நாட்டில் தோன்றி, தமிழ் மொழிக்கே சிறப்புத் தந்த, அறம், பொருள், இன்பம் ஆகிய
இம்மூன்றிலே தான் நாடு. இல்லை இந்த உலகமே அடங்கி
உள்ளது என்று வெண்பாக்களால் பாடி அதைக் குறள்
வெண்பாவால் இயற்றினார் திருவள்ளுவர்.
குறள் வெண்பா
என்பது ஒரு பாடல் இரண்டு அடிகளையே கொண்டு இருப்பதால் அவற்றைக் குறள் வெண்பா என்கிறோம்.
உலகம் போற்றும்
உத்தமம் பெருமாம். காவியச் செல்வம், செந்நாப்
புலவர், அவர்கள் பிறந்த இந்தத் தமிழ்நாட்டை உலகம் போற்ற வைத்தது அப்பெருமானின் குறள்
அன்றோ.
அவரால் கிடைத்த
பெருமை. தமிழ் நாட்டிற்கு அன்றோ? தமிழ் நாட்டு
மக்களின் பெருமையல்லவா? அவரைத் தந்தையாக, இத்தமிழகத்தின் பிள்ளையாய் பெற்றெடுத்ததல்லவா?
அவர் புகழ் ஓங்க, அவர் கவிதை நிலைக்க, அவரின் பெயரிலேயே கோயில் எழுப்பி, அவர் பெயராலேயே
அங்கு அந்த இடத்திற்குத் திருவள்ளூர் என்று பெயரிட்டது, தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும்
எவ்வளவு பெருமையை அளிக்கிறது.
இவற்றையெல்லாம்
யோசித்துக் கொண்டு இருக்கையில்,
பத்து பைசா முறுக்கு…
வேர்க்கடலை, பேப்பர் என்று பல குரல் எழுப்ப… அத்துடன் இந்தாய்யா… கடலை கொடு. பேப்பர்
கொடு என்று பயணிகள் கேட்கவும் பேருந்து ஒரே கலகலப்பும் சலசலப்பும் கலந்து இருந்தது. அப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தேன் 5.45 ஆகியிருந்தது. அப்போது ஓட்டுநர் தன் ஆசனத்தில் அமர்ந்து பேருந்தைக்
கிளப்பினார் அந்த இடத்தில் இருந்து.
பேருந்து வந்த
வழியே போகுதே என்று பழனி கேட்டான்.
ஆமாம். நாம் இப்போது மௌண்ட் வழியாக போக வேண்டியதால் வந்த
வழியே சற்றுச் சென்று சென்னைப் பட்டணம் போகும் வழியைப் பிடிக்க வேண்டும் என்றேன். நான் சொன்னது போலவே பேருந்தும் சென்றது. சற்று நேரம் அமைதி நிலைவியது. சட்டென்று பேருந்து தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு
மெல்ல நின்றது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். இரயில் வருவதற்கு அடையாள சிக்னலும், அதற்காகப் போகும்
வழியைத் தடுத்தும் இருந்தனர்.
திருவள்ளுவரின்
புகழுக்கு ஏற்றவாறு அந்த ஊரில் பல அலுவலகங்கள், தலைமை இருப்பிடங்களும் அமைந்து தம்
பணியைச் செய்வதுபோல, அவர்புகழ் விளங்கும் அவ்வூர்
இரயில் நிலையமும் தம் கடமையைச் செவ்வனே செய்கிறது. அந்த கடமையில் தான் நாங்கள் செல்லும் பேருந்து நின்று
விட்டது.
தன் கடமையைச்
செய்யாத, சில பணியாட்களின் கவனக் குறைவால் பல விபத்துக்கள் நிகழ்கிறது. இதனால் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் அடைகிறது. பொருட்சேதத்தை ஈடுகட்ட முடியும். ஆனால் உயிர்ச் சேதத்தை ஈடுகட்ட முடியுமா? இன்று
இந்தப் பொன்னான நாள் நாளை வருமா? அதுபோல் அல்லவா? இதன் நிலை.
எங்கள் பேருந்தின்
முன்னே லாரிகளும், கார்களும் பஸ்களும் வரிசையாக நின்றுக் கொண்டு இருந்தன. ஆனால் தனிப்பட்ட மனிதர்களோ? நிற்காமல் தண்டவாளத்தின்
குறுக்கே நடந்து போய்க் கொண்டும் வந்துக்கொண்டும் இருந்தனர்.
இப்படி பொதுமக்கள்
தன் தவறை உணராதும், இரயில் வருவதற்கு முன்னே போய்விடலாம் என்று கருதி வருகிறார்கள். திடீர் என்று இரயில் வந்தால் அவன் உயிர் போகும்
இடம் தெரியாது. இதை மனதில் சிறிதும் கருதாமல்
சென்றுக் கொண்டு இருந்தனர்.
தண்டவாளத்தின்
இரு பக்கங்களிலும் நெற்கதிர்கள் பச்சைப் பசேல் என்று அந்த இளம் மாலை நேரத்தில் கண்ணிற்குக்
குளிர்ச்சியை அது ஆடும் அசைவில் இருந்து தந்தது.
அது ஆடும் விதம் மழையை வரவழைக்க மயில் ஆடிய நடனம் போல மாலைக் காற்றே தன்னாலே
வரவழைக்கப்பட்டது என்று சொல்லும் வண்ணம் நடனம் ஆடியது.
இதற்கு இடையில்
தண்டவாளத்தின் மீது இரயில் ஊர்ந்து வெகு வேகமாக வந்துக் கொண்டும் அதனுடன் ஓர் பேரிரைச்சலை
எழுப்பிக் கொண்டும் அதிரும் விதமாக, வானத்தின் ராக்கெட் விரைவது போல தண்டவாளத்தில்
இரயில் தன்வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு சென்றது.
இரயில் பல மைல் கணக்கில் இருந்து வருவதால் மக்கள் ஊரின்
அழகையும், பயிர் வளத்தையும், மாலைக் காற்றையும் சுவாசிக்க ஜன்னல்களைத் திறந்தும், வாயிற்
படியின் அருகேயும் வெளியே தலையை நீட்டிக் கொண்டும் சென்றுக் கொண்டு இருந்தனர்.
இவர்கள் இப்படி
கவனமின்றி தலையை வெளியே நீட்டிக் கொண்டும், ஸ்டெய்லாக நின்றுக் கொண்டும் செல்கிறார்களே,
திடீர் என்று வண்டி நின்றால் இவர்கள் கதி என்ன என்று நினைக்கையில் எங்கள் பேருந்து
மெல்ல நகரத் தொடங்கியது.
இரயில் போனதும்
பணியாள் ஒருவன் கேட்டைத் திறந்ததும் பறந்தன வண்டிகள். முன்னாலே நின்று இருந்த வண்டிகளை எல்லாம் முந்திக்
கொண்டு சென்றது எங்கள் பேருந்து.
ஓட்டுநரைப் பாராட்ட
வேண்டியது தான். ஆனால் அதே சமயம் பயப்படவேண்டிய
நிலையும் உள்ளது. எந்த நேரத்தில் எந்த விபத்து
நேரிடுமோ யார் கண்டார்? ஓட்டுநரின் அதிவேகத்தால்
பிரேக் டவுன் காரணமாக பல விபத்துக்கள் நேரலாம்.
இந்த விஷயத்தில் ஓட்டுநருக்கு ஆலோசனை சொல்லலாம் என்றும் நினைத்தேன். எங்கே நான் சொன்னால் கேட்கவா போகிறார் என்று மனதுக்குள்ளேயே
எண்ணிக் கொண்டு சும்மா இருந்து விட்டேன்.
வெகு வேகமாகச்
சென்றுக் கொண்டு இருந்த எங்கள் பேருந்து ஒரு தனி ஊர் இல்லாத தனித்த இடத்தில் நின்றது. அப்போது இரண்டு பயணிகள் இறங்கவும் மெட்ராஸ் பயணிகள்
அந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டு தன்னுடைய இனிய குரலில் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சற்று தூரம் சென்ற
பேருந்து மீண்டும் நின்றது. அங்கு ஒரே பயணிகள்
கூட்டம். ஒரே இரைச்சல் என்ன என்று ஜன்னல் வழியாக
எட்டிப் பார்த்தேன். அங்கு ஒரு பல்லவன் பேருந்து
111c என்ற எண் கொண்டது ப்ரேக்டவுன் ஆகி பயணிகளைக் கீழே இறக்கி விட்டு இருந்தது.
பயணிகள் தங்களூர்
வரை அந்த இரவு வேளையில் தவித்த சமயத்தில்தான் எங்கள் பேருந்து சென்றது போலும். அதற்கு முன்னும் ஓர் பேருந்து அங்கு நின்றுக் கொண்டு
இருந்தது. அதிலும் பயணிகள் நிறம்பினர். மீதம் உள்ளவர்கள் நாங்கள் இருந்த பேருந்தில் ஏறினார்கள்.
நடத்துநர் ஏம்மா
உள்ளே போங்க… ஏய்யா… உள்ளே நகரு என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
நான் கீழே இருந்து
கும்மலைப் பார்த்தேன். கும்மல் அதிகம்தான்
என்ன செய்வது என்று நினைத்து பக்கத்தில் நின்றுக் கொண்டு இருப்பவர்களைப் பார்ர்தேன். ஒரு பெரியவர்
தன் சாமான்களைக் கையில் வைத்துக்கொண்டு நான்குபேர் நிற்கும் இடத்தை அடைத்துக் கொண்டு
நின்று இருந்தார்.
சார் அந்த சாமான்களை
இப்படி கொடுங்க… என்று சொல்லி வாங்கி சீட்டின் கீழே வைத்தேன்… பிறகு…
அவரைப் பார்த்தேன். அவரது பெண் போல இருக்கும், அவள் கையை பிடித்துக்
கொண்டு நின்று இருந்தார்.
நான்கு பேருக்கு
இடம் கொடுத்த நான் இன்னொருவருக்கும் இடமளிக்கலாம் என்று எண்ணி…
என்னம்மா… பாப்பா…
இங்கே வர்ரியா… என்றேன்.
அந்தப் பாப்பா…
அவளுடைய அப்பாவைப் பார்த்தாள்.
நல்லதுப்பா என்று அவளை என்னிடம் ஒப்படைத்தார்.
அது ஆறு வயது
மதிக்கத்தக்க பெண் ஆகையால் அவளை என் இரு கால்களுக்கு இடையில் அவளை நிற்க வைத்துக் கொண்டேன். அவள் தந்தை பக்கத்திலே நின்றுக் கொண்டார்.
பேருந்து புறப்பட்டு
விட்டது. அப்போது மணி 6.20.
என் பக்கத்தில்
இருந்த அவள் தந்தை இது மௌண்ட் தானே என்றார்.
ஆமாம் என்றேன்.
நண்பன் பழனி நான்
சொன்னதைக் கேட்டு புரியாதவன் போலக் காணப்பட்டான்.
நான் கவனியாதவன் போல் இருந்து விட்டேன்.
அவள் தன் தந்தையுடன்
எப்போப் போய் சேருவோம் என்று தன்னுடைய இனிமையான குரலில் தெலுங்கு மொழியில் பேசினாள்.
பேருந்து திருமழிசையை
அடைந்ததும் அவள், அப்பா… திருமழிசை என்றாள்.
இதிலிருந்து அவள்
படிப்பது தமிழ் என்றாலும் தாய்மொழி தெலுங்கு என்று ஊகித்துக் கொள்ள அதிக நேரம் போகவில்லை,
அப்போது பழனி
நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டதா என்றான்.
இல்லை என்று மெல்ல
தலையை மட்டும் அசைத்து பதில் கொடுத்தேன்.
பேருந்தில் இடம்
கிடைக்கவே அவள் அப்பா தனக்குப் பக்கத்து சீட்டில் அமர்ந்துக் கொண்டார். அவர் அம்மா …. இலதா இங்கே வா… என்றார்.
அப்பொழுது புரிந்துக்கொண்டேன். அந்த ஆறு வயது இனிய தெலுங்கு பேச்சாள் பெயர் லதா
என்று.
லதா என்பதும்
எனக்குச் சினிமா நடிகை லதா மீது ஞாபகம் வந்தது.
அவளையும் இவளையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
நடிகை லதாவிற்கு
உள்ளது போல தொத்துப் பற்கள். அதே முக அழகு. இவள் குழந்தை லதாவாக இருக்கிறாள் என்று நினைத்து
அவளை அவள் தந்தையிடம் அனுப்பினேன்.
நாங்கள் பயணம்
செய்த பேருந்து பரங்கிமலை, கிண்டியைத் தாண்டியதும் நாங்கள் எங்கள் இருப்பிடத்தில் இருந்து
எழுந்துக் கொண்டோம். பேருந்து சைதாப்பேட்டை
பேருந்து நிறுத்தத்தில் நிற்க, நாங்கள் இருவரும் அந்த இனிய ஆங்கிலப் பேச்சாளர்களிடம்
இருந்தும், தெலுங்குப் பேச்சாளியிடம் இருந்தும், எங்களுடன் பயணம் செய்த பயணிகளிடம்
இருந்தும் 7.20க்கு விடைபெற்று சென்னை மண்ணில் காலை வைத்தோம்.
நாங்கள் சைதாப்பேட்டை
அரசினர் மாணவர் விடுதியை நோக்கி நகரவும், நாங்கள் வந்த பேருந்து எங்களையும் தாண்டி
முன்னோக்கிச் சென்றது.
என்ன நாற்றம்,
அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் பழனி.
இதுதாண்டா பட்டணம்
என்றேன்.
கெட்டது போ. நம் ஊரில் கழனிகளில் கொஞ்ச நேரம் இருந்தால் எவ்வளவு
இன்பமாயும், அமைதியையும் தருகிறது. இங்கு என்னடா
என்றால் ஒரே சத்த மயமாகவே இருக்கிறதே? என்று அலுத்துக் கொண்டான்.
நீண்ட நேரம் பயணம்
செய்ததால் எங்கள் முகத்தில் தூசிகள் பரவிக் கிடந்தன. சிறுநீர் வேற முட்டிக் கொண்டு வரவே, சிறுநீர் கழித்துவிட்டு
அரசினர் மாணவர் விடுதியை அடைந்தோம். அங்கு…
நண்பன் விஜயனும்,
கோவிந்தராஜும் இருந்தார்கள்.
நான் மெல்ல உள்ளே
சென்றேன்.
எப்படா என்று
சாதாரணமாகக் கேட்டார்கள். என் பின்னாலேயே வந்த
பழனியைப் பார்த்ததும்.
அடடா… பழனியா?
நீ எப்படா வந்தே… என்று வியப்பு மேலிடக் கேட்டார்கள்.
நான் அவர்கள்
அறைக்குப் பல முறை சென்று இருக்கிறேன். ஆனால்
பழனி இது முதல் தடவையல்லவா?
நாங்கள் கொண்டு
சென்ற பையைப் பெட்டியில் வைத்துவிட்டு முகம் அலம்ப குளியலறைக்குச் சென்றோம்.
அப்பொழுதுதான்
என்ன விஷயம் என்று மெல்ல கேட்டான் விஜயன்.
ஒண்ணுமில்லே. ஏர்மேன் தேர்வுக்கு நேர்காணல் கடிதம் வந்திருக்கு. அதற்குத்தான் வந்தோம் என்றேன். பேச்சோடு பேச்சாக பழனி வந்தது உனக்கு வியப்பாக இல்லியா?
என்றேன்.
ஆமாண்டா…
நான் வருவதும்,
தங்குவதும் இதுதான் முதல் தடவை. அதுவும் உங்கள்
அறையில் என்றான் பழனி.
முகம் அலம்பிக்
கொண்டு அறைக்குச் சென்றோம். சாப்பிட்டு வருவதற்கு
நாங்கள் கிளம்பினோம்.
பழனி எனக்கு சிற்றுண்டிதான்
வேண்டும் என்றான். எனக்கு அதெல்லாம் இரவு நேரத்தில்
பிடிக்காத ஒன்று. ஆகவே இரண்டும் கலந்த ஓட்டலை
தேர்ந்து எடுத்துச் செல்லலாம் என்று மெல்ல கருணாநிதி வளைவுக்குச் சென்றோம். அங்கு உடுப்பி ஓட்டலிலே தான் இரண்டும் இருக்கும்
என்று எண்ணி உள்ளே நுழைந்தோம். சாப்பாட்டுக்கான
இரண்டு ரூபாய் கொடுத்து மீல்ஸ் டோகன் ஒன்றை வாங்கிக் கொண்டேன். அவன் டிபன் சாப்பிட்டுவிட்டான்.
சாப்பிட்டுவிட்டு
வெளியே வந்து நீ ஏன் சாப்பிடமாட்டேன் என்கிறாய் என்றேன்.
இங்கு எல்லாம்
சாம்பார் நல்லா இருக்காது என்றான்.
அடப்பாவி… இதற்கா
சாப்பிடமாட்டேன் என்றாய். இங்குச் சாம்பார்
நல்லா இருக்கும் என்று தானே இவ்வளவு தொலைவு வந்தோம் என்று பேசிக் கொண்டே அறையை அடைந்தோம்.
விஜயனும், கோவிந்தராஜும்
விடுதியில் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இருந்தார்கள்.
நாங்கள் படுத்துக்
கொள்வதற்கான பெட்சீட் இரண்டைக் கொடுத்து, வரண்டாவில் படுக்கச் சொல்லி தானும் அருகில்
படுத்துக் கொள்வதாகக் கூறினான்.
படுக்கும்போது
விஜயனிடம் காலேஜ் பற்றியும், மாணவர்கள் பற்றியும், அவனை மாணவர்கள் எப்படி எல்லாம் ரேக்கிங்
செய்தார்கள், இப்பொழுது எப்படியெல்லாம் பழகுகிறார்கள் என்று பேசிக் கொண்டு நீ எப்பொழுது
படுப்பாய் என்று கேட்டதற்கு பதினொன்று ஆகும் என்றான்.
சரி. நீ போய் உன் வேலையைக் கவனி. நாங்கள் தூங்குகிறோம். விடியற்காலையில் எழுந்துக்கனும் என்று அவனை வழியனுப்பிவிட்டுத்
தூங்கினோம். அப்போது நேரம் இரவு 9.45 இருக்கும்.
அப்போது அந்த
இரவு நேரத்தில் விடுதி வராண்டாவில் உள்ள சென்னை விபிதபாரதியில் விளம்பரங்களைப் பரப்பிக்
கொண்டு அந்த பில்டிங்கையே அதிர வைத்துக் கொண்டு இருந்தது வானொலிப்பெட்டி.
(2)
சென்னை மாநகர்
அந்த நள்ளிரவில் எங்கும் அமைதியாய், காசு போட்டாலும் அதன் சத்தம் எங்கும் அதன் சக்திக்கு
ஏற்ற ஒலியை எழுப்பி மற்றவர் காதைப் பிளக்கும்.
எங்கும் ஒரே சத்தம், பஸ், கார், ஸ்கூட்டர்
மற்றும் பல தொழிற்சாலைகள் இவைகள் எழுப்பும் ஒலியும், அவற்றில் இருந்து வெளியாகும் கரித்துகள்களும்
நமக்கு நன்மையை அளிக்கிறதா? இல்லை, இல்லை.
ஒலியை நம் காது கேட்பதால் செவிட்டுத்
தன்மை உண்டாக வழி வகுக்கிறது. கரித்துகளைக்
காற்றின் மூலம் சுவாசிப்பதால் நமது இருதயம் பலகீனம் அடைகிறது. இதனால் நம் ஆரோக்கிய உடலுக்குத் தீங்கு செய்கிறது. அந்த நள்ளிரவில் பாதைகளில் விளக்கொளியைத் தவிர வேறு
எந்த நடமாட்டமும், வாகனமும் செல்லவில்லை. எனக்கே
ஆச்சரியமாக இருந்தது. இந்த நள்ளிரவிலாவது ரோடு
கொஞ்சம் ஓய்வு எடுக்கிறதே என்று நினைத்தேன்.
அதே சமயம் பகலில்
வாகனங்கள் ஊர்வதும், கதிரவனின் ஒளியினால் ரோடும், பூமியும் வெப்பம் அடைந்து தாங்காது
தவிக்க வைக்குது. ஆனால் அதேபோல் இரவு வேளையில்
கடற்கரைப் பக்கம் என்பதால் குளிருக்கும் குளிர்ச்சியான பனித்துளிகளுக்கும் பஞ்சம் ஏது? இரவில் குளிர்ச்சியடையவும் பகலில் வெப்பமடையவும்
சூரியனும் சந்திரனும் மாறிமாறி வருவது அது அதன் கடமை. ஆனால் அதன் கடமை இதுவென்றால் அதன்பழி வந்த இதற்கும்
வேறு மாறுபாடு ஏது?
இந்தக் குளிர்ச்சியான
காற்று எங்கள் உடல் மீது மெல்லத் தவழ, எங்கள் உடம்பு சிலிர்க்க எழுந்து எனது நண்பன்
பழனியை எழுப்பி மணியைக் கேட்டேன். பன்னிரண்டு
என்றான் படுத்துக் கொண்டேன்.
சுற்றுப்புறச்
சூழ்நிலை சரியில்லாமலும், தன் உடம்புக்கு ஒத்துக்காத நிலையிலும், புத்திடம் ஆகையினால்
ஒருவனுக்கு உறக்கம் வருவது கடினமே. அந்த நிலையில்தான்
நானும் என் நண்பனும் உறக்கம் வராமல் படுத்துக்
கொண்டு அரை மணிக்கு ஒருமுறை எழுத்து மணி பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டோம். திடீர் என்று மணியைக் கேட்ட போது நண்பன் 4.45 என்றான். இதைக் கேட்டதும் எனக்குத் திகில் வந்ததே.
ஆறு மணிக்கு எல்லாம்
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டிய நாங்கள் காலம் தாமதமாக எழுந்துக் கொண்டோமே
என்று என் நண்பனிடம் பரபரப்பு அடைந்து பக்கத்தில் உறங்கி இருந்த விஜயனை எழுப்பினோம். அலரியடித்துக் கொண்டு எழுந்தவன்…
என்னடா என்றான்.
மணி 5 ஆகப் போகுதடா…
அவன் கழிவறை போறியா
என்றான்.
ஆமாம் என்றோம்.
கழிவறை போய்ட்டு
பல் துளக்கிக் கொண்டு ஒப்பனை பண்ணிக் கொண்டு விடுதியை விட்டு வெளியில் வந்தோம்.
4.30க்கு எல்லாம்
சிட்டியில் டவுன் சர்வீஸ் கிளம்பிவிடும் என்று
கேள்விப் பட்டேன். இன்னும் ஏதும் இங்குக் காணோம்
என்று நண்பன் விஜயனைக் கேட்டேன். அவனும் ஆச்சர்யத்தோடு
வெறித்துக் கிடந்த சாலையைப் பார்த்து…
இன்றைக்கு ஸ்ட்ரைக்கா?
என்றான்.
அம்போசிவம் என்றான்
பழனி.
அதுசவம் என்றேன்
நான்.
என்னடா சொல்லுறே
என்று பழனி கேட்டான்.
ஒண்ணுமில்லே. இப்போது மணி என்ன?
தன் கைக்கடிகாரத்தை
மின்சார விளக்கொளியில் பார்த்து 4.15 என்றான்.
அப்படி என்றால்
உன்னோட வாச் ரிவர்ஸ்ச்சிலே அடிக்கிறது போல இருக்கு.
இல்லடா… அந்த
இருட்டில் பார்த்தேனா? 3.45யை 4.45 என்று சொல்லிட்டேன் என்றான்.
எல்லாம் நல்லதுக்கே
என்று சொல்லிக் கொண்டு விஜயனை விடுதிக்கு அனுப்பிவிட்டு நானும் பழனியும் நடந்துக்கொண்டே
பேசலானோம். எங்களக்குள் ஓர் பிரச்சனை தாம்பரத்திற்கு
பஸ்சில் செல்வதா அல்லது எலெக்ட்ரிக் டிரெய்ன்ல போவதா? என்று கடைசியாக எலெக்ட்ரிக் டிரெய்ன்ல
போவது என்று முடிவு எடுத்து இரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து சென்றுக் கொண்டு இருந்தோம். வழியில்,
லொள்… லொள்…
பழனி அந்தச் சத்தம்
கேட்டு பயந்து நின்று விட்டான்.
டேய் இதற்கு எல்லாம்
பயந்து நின்று விட்டால் அந்த நாய் சொம்மா விடாது.
நீ வாடா போய்க் கொண்டே இருக்கலாம் என்று நடந்தோம். சற்று தூரம் சென்றதும் நாய் திரும்பிச் செல்லும்
ஓசை கேட்டது.
4.45க்குச் சைதாப்பேட்டை
இரயில் நிலையம் சேர்ந்தோம். இரண்டு தாம்பரம்
டிக்கெட் வாங்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்றோம்.
இரயில் வருவதாகத்
தெரியவில்லை. மணி 5 ஆகியது. அப்போதும் காணவில்லை. அப்படி ஒருமுறை பிளாட்பாரத்தை நோட்டம் விட்டேன். பிளாட்பார வாட்ச் 5.15யைக் காட்டியது.
இதில் எது சரி
என்று பழனியைக் கேட்டேன். அதற்குப் பக்கத்தில்
உட்கார்ந்து இருந்த ஒருவர்…
உங்க வாட்ச் சரி. அரசாங்கம் முன் பட்ஜெட் போடுது இல்லே. அதுபோல இதுவும் ஃபாஸ்ட்டா போகுது என்றார்.
எங்களுக்குச்
சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்போடு அவரும்
கலந்துக் கொண்டார். எங்கள் சிரிப்பொலியுடன்
எலெக்ட்ரிக் டிரெய்னின் ஆரன் ஒலியும் சேர்ந்துக் கொண்டு வந்தது.
நாங்கள் பயணம்
செய்துக் கொண்டு இருக்கும் இரயில் சைதாப்பேட்டையைத் தாண்டி கிண்டி, பரங்கிமலை இவைகளைக்
கடந்து மீனம்பாக்கம் நிலையத்தில் நின்றது.
அங்கு ஒருவன் எங்கள் அருகில் வந்தமர்ந்தான்.
இதுவரை பேசாது
பயணம் செய்த எங்களை, எங்கள் வாய் அந்தக் காலத்தில் வெள்ளையன் ஆட்சியில் கட்டுண்டு இருந்தவர்கள்
விடுதலை ஆனதும் எப்படி இருப்பார்கள். இது சொல்லித்தான்
தெரிய வேண்டுமா? அதுபோல, எங்கள் அருகில் வந்து அமர்ந்தவன் எங்கள் வாய்க்கு விடுதலை
தர மனமெண்ணியவன் போல,
நீங்களும்
IAF வர்ரீங்களா? என்றான்.
ஆமாம் என்றோம்.
அறிமுகமே இல்லாத
ஒருவன் தம்மிடம் வலிய வந்து பேசுவானே யானால் அவனின் இடம், பெயர் இவற்றைத் தெரிந்துக்
கொள்ளவே எல்லார் மனமும் தூண்டும். இதற்கு நாங்கள்
என்ன விதிவிலக்கா?
நீங்களும் அங்கே
தான் வர்ரீங்களா? என்றான் என் நண்பன்.
ஏண்டா? அவர் நம்ம கேட்டதிலே பதில் இருக்கும் போது அவரை
வேறு கேட்கணுமா என்றேன்.
அதற்கு ஒரு புன்சிரிப்பை
உதிர்த்து விட்டு பரவாயில்லீங்க… என்றான் அவன்.
உங்கப்பெயர் என்ன
என்றேன்.
இராஜேந்திரன். என்னுடைய சொந்த ஊர் பாண்டி. நான் இங்கு கெமிஸ்ட்ரி மேஜர் எடுத்திருக்கிறேன்
என்றார்.
எந்தக் காலேஜ்
என்றேன்.
பச்சையப்பாஸ்
காலேஜ் தேர்ட் இயர் என்றார்.
பச்சையப்பாவா…
ஆமாம்…
அதற்கும் நீங்கள்
மீனம்பாக்கத்தில் தானே ஏறினீர்கள்…
அதற்கு அவர் சிரித்துக்
கொண்டே ஜெயின் காலேஜில் என்னோட ஃப்ரண்ட் ரூம்ல இருந்து வருகிறேன் என்றான்.
அப்படியா?
ஆமாம். இதற்கு நான் அப்லை பண்ணனும் என்று நினைக்கவே இல்லை. நண்பனின் தூண்டுதலில் போட்டேன். இன்ட்டர்வியூவும் வந்திட்டது. ஒரு நாள் காலேஜ் போகட்டும் என்று வந்துட்டேன் என்றார். இவர் யாரு என்று என்னைக் கேட்டர்.
இவன் என் கிளாஸ்மெண்ட். நானும் இவனும் ஒன்றாகவே அப்லை செய்தோம். ஒன்றாகவே இன்ட்டர்வியூவும் வந்திருக்கு என்றேன்.
உங்களது ஊர் மெட்ராசா
என்றார்.
இல்லை. திருத்தணி பக்கம்.
திருத்தணியா?
என்னங்க…
அங்கு ஒருவன்
பெயரைச் சொல்லி உங்களுக்குத் தெரியுமா? என்றார்.
எங்களுக்குத்
தெரியாது. ஆனால் எங்கள் ஊர் பையன் ஒருவன் பெயரைச்
சொன்னோம்.
ஓ… அவன் என் கிளாஸ்மெண்ட்டு
தான் என்றார்.
அறிமுகம் எல்லாம்
நல்ல விதமாக அமைந்ததால் அவர்களிடம் நெருக்கம் அதிகமாகும் என்பது திண்ணம். அதுபோல, எங்கள் அறிமுகம் அறிந்ததாகவே இருப்பதால்
பேச்சும் வளர்ந்துக் கொண்டே சென்றது.
இதற்குத் தகுந்தாற்போல் நாங்கள் பயணம் செய்துக்கொண்டு இருக்கும் இரயில்
ஒரு பேரிரைச்சலுடன் தாம்பரம் வந்து அடைந்ததைப் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் இறங்குவதைக்
கண்டு வெளியே பார்த்தோம். தாம்பரம் ஸ்டேஷன்
என்று நாங்களும் இறங்கிப் பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம். அப்போது நேரம் சரியாக 6 ஆகி இருந்தது.
நான் பல்லவன்
டிப்போவிற்குச் சென்று IAFக்குப் பேருந்தையும் நேரத்தையும் கேட்டேன். அதற்கு அவர்,
51M வரும்.
அது 6.20க்குத்தான் புறப்படும் என்றார்.
இதற்குள் சாப்பிட்டு
வரலாம் என்று ஓட்டலுக்குச் சுத்தி சுத்தி எங்கள் கால் தான் வலித்தன. கடைசியாக ஆளுக்கு மூன்று வாழைப் பழத்தை அந்தக் காலை
வேளையில் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையம் சென்றோம். அங்கு,
எங்களைப் போல
இன்னும் பலர் அங்குக் காத்துக் கொண்டு இருந்தனர்.
அவர்களையும், அவர்களின் உடலையும் பார்த்து நாம் எங்கே தேரப் போகிறோம் என்று
நண்பன் அலுத்துக் கொண்டான்.
ஒருவன் இந்த வேலை
நமக்குக் கிடைக்கும் என்று செல்கிறான். கிடைக்கவில்லை
என்றால் அலுத்துக் கொள்கிறான். ஆனால், ஒருவன்
வேலைக்குச் செல்லும் முன் இருக்கும் நிலையைக் கண்டதும் மனம் உடைந்துவிடும். இந்த நிலையில் தான் நாங்கள் இருந்தோம். அந்நேரம் பேருந்து வரவும் நாங்கள் ஏறிக்கொண்டோம். சிறிது நேரத்துக் கெல்லாம் அப்பேருந்து புறப்பட்டது. 25 பைசா கொடுத்து ஆளுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக்
கொண்டோம்.
பேருந்து சென்றுக்
கொண்டு இருக்கும் போது மழைத்தூரல் போட்டுக் கொண்டு இருந்தது. அது நொடிக் கணக்கில் வளர்ந்து பலத்த மழையாக உருமாறி
எங்களை அதிக குளிருக்கு ஆளாக்கி ஓர் குலுக்கலும் IAF வாயிலில் பேருந்து நின்றது. அந்த
மழையில் ஒரு கூடாரத்தில் இறக்கி விட்டுவிட்டுப்
பேருந்து புறப்பட்டுச் சென்று விட்டது.
பலத்த மழையில்
அந்தக் கூடாரத்தினுள் புகுந்துக் கொண்டோம்.
மழை நின்றபாடு இல்லை.
9 மணிக்கு மழை
ஓய்ந்தது. வரிசையாகத் தேர்வு நடக்கும் இடத்திற்குச்
சென்றோம்.
முதலில் பிசிக்கல்
டெஸ்ட் வைத்தார்கள். அதில் பழனி தேர்ந்தெடுக்கப்பட்டான். நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பழனியிடம் விடைபெற்றுக்
கொண்டு அறைக்குச் சென்று நண்பர்களிடம் விடைபெற்று அன்று இரவே வீடு வந்து சேர்ந்தேன்.
Comments
Post a Comment